Menu

மாமதுரை போற்றுவோம்

மதுரை திருவிழாக்களின் பூமி. திருவிழா என்றாலே கொண்டாட்டந்தான். மதுரையும் தெய்வமும் வேறுவேறல்ல. தெய்வங்களைக் போற்றுவதைப் போல மதுரையையும் போற்றித் தொழுவது நம் கடமை.

 

மதுரை என்றாலே எனக்கு மந்திரம். மதுரையைக் காண்பதே தெய்வ தரிசனம். மதுரையே எனைக்காக்கும் பெருந்தெய்வம்.

 

கடம்பவனம், திருஆலவாய், நான்மாடக்கூடல், விழாமலி மூதூர், தூங்காநகரம், கோயில் மாநகரம், கிழக்கத்திய நாடுகளின் ஏதென்ஸ் எனப் பலபெயர்களைக் கொண்டது நம் மதுரை. உலகில் வேறு எந்த ஊருக்கும் இத்தனைப் பெயர்கள் இருக்குமா என்று தெரியவில்லை.

 

மதுரையின் தொன்மையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக ‘மாமதுரை போற்றுவோம்’ என்ற விழா

 

மதுரையைப் போற்றுவோம்

தொன்மையைப் போற்றுவோம்

வைகையைப் போற்றுவோம்

என்ற மூன்று தலைப்புகளில் கொண்டாடப்படுகிறது.

 

உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று, நம்முடைய மதுரை. நதிக்கரையில் முளைத்த நாகரீகத்தின் அடையாளமாய், வைகைக் கரையில் முளைத்த வரலாற்று நகரம்.

 

இந்தியாவெங்கும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில், அதிகமான கல்வெட்டுக்கள் தமிழ் மொழி சார்ந்த கல்வெட்டுகள் ஆகும். அதில் காலத்தால் முதன்மையான கல்வெட்டுகள் அதிகம் கிடைத்தது நம்முடைய மதுரையில்தான்.

 

அதாவது, இப்பரந்த பாரத நாட்டில் எழுத்தும், எழுத்து சார்ந்த அடையாளமும் முதன்மையாகக் கொண்ட பழம்பெரும் நகரம் நம்முடைய மாமதுரை.

 

சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலான, இந்நகரின் பாரம்பரியத்தை வரலாறும், இலக்கியமும் தொல்பொருள் ஆவணங்களும் மிகத்துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன. இருபெரும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் இந்நகர் இடம் பெற்றுள்ளது.

 

கவுடில்யரின் அர்த்தசாஸ்திரமும், இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சமும் நமது நகரைப் பற்றிப் பேசுகின்றன. கிரேக்க நாட்டு தூதுவராய் வந்த மெகஸ்தனிஸ் இந்நகரைப் பற்றி வியந்து கூறுகிறார்.

 

உலகின் மிக மூத்த அரச குலங்களில் ஒன்றான பாண்டியர்களின் தலைநகராய் இந்நகரம் விளங்கியதைப் பற்றி ரோமானிய கிரேக்க யாத்திரீகர்களும்., வடஇந்திய காப்பியக் கர்த்தாக்களும் தமிழ்ப் புலவர்களும் இடைவிடாது எழுதி வந்துள்ளனர்.

 

நெடியதொரு வரலாற்றின் சின்னமாய் விளங்கும் இந்நகர் தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகர் என்பதை உலகறியும்.

 

உலகின் மிகப்பழைய நகரங்களான ரோம், வெனீசு, மொகஞ்சதரோ போல மதுரையும் நன்கு திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம். தாமரைப் பூவைப் போல இந்நகரின் வடிவமும் அதன் இதழ்களைப் போல தெருக்களும் அதன் நடுவில் உள்ள மொக்கினைப் போல கோயிலும் இருப்பதாக பழந்தமிழ் இலக்கியமான பரிபாடல் கூறுகிறது.

 

மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய பழந்தமிழ் நூல்கள், இந்நகரின் தெருக்களையும், கோட்டையையும் கோபுரங்களையும் ஒரு நவீன ஓவியம் போல வரைந்து காட்டுகின்றன. தேவாரம் பாடிய மூவரும், ஆழ்வார்கள் பலரும் இந்நகரைத் தமது தீந்தமிழால் பாடி மகிழ்ந்துள்ளனர்.

 

திருவாசகமோ சிவன் கூலித்தொழிலாளியாக வந்து மதுரையின் மண்ணைச் சுமந்தான் என்று பாடுகிறது. சிவபெருமான் மதுரையில் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியதாக திருவிளையாடல் புராணம் பேசுகிறது. மதுரையைப் பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் நூற்றுக்கணக்கானவை.

 

இந்நகரின் எந்த ஒரு தெருவும் சுமார் இரண்டாயிரம் ஆண்டு நீளமுள்ளதாகத்தான் இருக்கிறது. வரலாறு வற்றாமல் ஓடும் நதியைப் போல, இம்மாநகரின் தெருக்களில் ஓடிக் கொண்டேயிருக்கிறது. அதனால்தான் மதுரை ஒரு காவிய நகரமாக ஓளி வீசுகிறது.

 

இக்காவிய நகரின் பாரம்பரியத்தையும் வரலாற்றுச் சிறப்புகளையும் முதலில் நாம் உணர வேண்டும். விலைமதிப்பில்லாத ஒரு கலாச்சாரப் பூமியில் தான் நாம் வாழ்கிறோம். தொழில் செய்கிறோம். படிக்கிறோம். உழைக்கிறோம் என்ற சிந்தனை நம் எல்லோருக்கும் வேண்டும்.

 

நமது குடும்பத்தினருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு இந்நகரம் ஒரு பழமையின் குறியீடாக தெரியக்கூடாது. மாறாக ஒரு பெருமையின் அடையாளமாகத் தெரிய வேண்டும்.

 

அடுத்த தலைமுறையின் நினைவுகளில், நமது நகரத்தைப் பெரும் செல்வமாக கருதும் சிந்தனையை ஊட்ட வேண்டியது நம் ஒவ்வொருவரது கடமையாகும்.

 

இக் கடமையை நிறைவேற்ற மக்களிடம் ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் அமைப்புதான் ’‘மாமதுரை போற்றுவோம்’ என்ற இந்த அமைப்பு.

 

இதன் நோக்கம் மதுரையை நேசிப்பதையும், போற்றுவதையும், நமது வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றும் உணர்வை உருவாக்குவது தான்.

 

நமது நகரின் பழம் பெருமை பேசுவது என்பது வயதான காலத்தில் நினைவுகளை அசை போடுவதைப் போன்ற பணியல்ல. நவீன வாழ்வுக்கு முகங்கொடுக்கும் நகரமாக நமது நகரத்தை மாற்ற நினைக்கும் ஒரு கனவின் வெளிப்பாடு.

 

Facebook Comments

வளமான வாழ்வை உருவாக்கும் ஐந்துநிமிட யோகாசனம்

தினமும் 5 நிமிடம் யோகாசனம் செய்தால்...

Left Menu Icon