Menu

தமிழகத்திற்குரிய தனிப்பெருங்கலை கோபுரக்கலை மரபு

தமிழகத்திற்குரிய தனிப்பெருங்கலை என்று இன்று எஞ்சுவதில் கோபுரங்களே முதன்மையானவை. இந்திய சிற்பக்கலையின் சிறப்புக்கூறுகளில் ஒன்று கோபுரம்.

 

வேசரம், நாகரம், திராவிடம் என பிரிக்கப்படும் சிற்பமரபில் தென்னகச்சிற்பக்கலை திராவிடம் எனப்படுகிறது. அந்த மரபைச் சேர்ந்த கோபுரங்கள் கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களிலும் உள்ளன.

 

கேரளக் கட்டிடக்கலை முற்றிலும் மாறான ஒரு தனிப்போக்கு. திராவிடக் கட்டிடக்கலையின் உச்சகட்ட அழகியல் வெளிப்பாடு கோபுரங்களே

 

கோபுரத்தின் சிறந்த உதாரணங்கள் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் இருந்தாலும்கூட அங்குள்ள பேராலயங்கள் தொடர்ச்சியான அயல்மதத்தவரின் ஆட்சியினாலும், படையெடுப்புகளினாலும் அழிக்கப்பட்டன.

எஞ்சியவை மிகச்சிலவே. தமிழகத்தின் பேராலயங்களும் படையெடுப்பாலும் கைவிடப்பட்டமையாலும் அழிந்தாலும்கூட 1529 முதல்1736 வரையிலான நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அவை புதுப்பிக்கப்பட்டன.

 

ஏராளமான பெருங்கோபுரங்கள் புதிதாக எழுப்பப் பட்டன. நாம் தமிழகத்தின் பெருமிதமாக இன்று முன்வைக்கும் கோபுரங்கள் பல நாயக்கர்களால் உருவாக்கப்பட்டவை.

 

நாயக்கராட்சி வீழ்ச்சியடைந்தபின் இருபதாண்டுகளுக்குள்ளாகவே பிரிட்டிஷ் ஆட்சி தமிழகத்தில் நிலைகொண்டது. அவர்கள் பண்டையப் பண்பாட்டைப் பேணுவதிலும் ஆராய்வதிலும் ஆர்வம்கொண்டிருந்தார்கள்.

 

தஞ்சை பெரியகோயில், மாமல்லபுரம் போன்ற கலைச்செல்வங்களை இடிபாடுகளிலிருந்து மீட்டெடுக்கவும் விரிவாக ஆராய்ந்து பதிவுசெய்யவும் அவர்கள் ஆற்றிய பணி முதன்மையானது. ஆகவே இன்று தமிழகம் கோபுரங்களின் நிலமாக உள்ளது.

 

தமிழகத்திற்குள் வரும் எந்த அயல்நாட்டவரும் உடனடியாகக் கவரப்படுவது கோபுரங்களால்தான். இங்குள்ள பல ஊர்களின் மைய அச்சாகவே ஆலயக்கோபுரங்கள் அமைந்துள்ளன.

 

கோபுரம் ஒரு படிமமாக நம் மொழியில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இன்றுகூட நாம் சிறிய அளவில் கோபுரங்களைக் கட்டிக்கொண்டேதான் இருக்கிறோம். தமிழகத்தின் அரசு இலச்சினையே கோபுரம்தான்.

 

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் தஞ்சையின் கலைவரலாற்றாசிரியர்களில் முதன்மையான சிலரில் ஒருவர்.

 

தஞ்சைப் பெரியகோயில் பற்றிய அவருடைய தஞ்சாவூர்-இராசராசேச்சரம் [Rajarajechcharam] ஒரு சமகாலப்பேரிலக்கியம் என்று ஐயமறச் சொல்லாம். அவருடைய தமிழகக்கோபுரக்கலைமரபு தமிழில் கோபுரங்களைப்பற்றி அறிவதற்கு உதவும் மிகச்சிறந்த நூலாகும்.

 

கோபுரம் என்னும் தனிக்கலையின் தோற்றம், அதன் வெவ்வேறு வடிவங்கள், அது படிப்படியாக இந்தியாவில் வளர்ந்துவந்த விதம் கோபுரங்களிலுள்ள வெவ்வேறு கலைக்கூறுகள் கோபுரங்களிலுள்ள வரலாற்றுப்பதிவுகள் என பல பகுதிகளாக விரிவான புகைப்படங்கள் மற்றும் கோட்டோவியங்களுடன் அமைந்திருக்கும் பெரிய நூல் இது.

 

கோபுரம் என்னும் சொல் தமிழின் தொன்மையான நூல்கள் எதிலும் இல்லை. வாயில்மாடம் என்னும் சொல்லே கோபுரத்துக்கு நிகரான சொல்லாக இருந்திருக்கிறது.

மாடங்களையும் பெரிய நுழைவாயில்களையும் பற்றிய குறிப்புகளும் பல தெய்வங்கள் அமைந்த கோட்டம் என்னும் ஆலய வளாகங்களைப்பற்றிய செய்திகளும் தமிழிலக்கியங்களில் இருந்தாலும் கோபுரம் என்னும் அமைப்பு இருந்தமைக்கான சான்று இல்லை.

 

காலத்தால் பிந்தைய நூலான கொங்குவேளிரின் பெருங்கதையில்தான் கோபுரம் என்னும் சொல் முதல்முறையாக வருகிறது. “வாழிய நெடுந்தமை எம் இடர் தீர்கென கோபுரந்தோறும் பூமழை பொழிய’ என்னும் வரியை குடவாயில் பாலசுப்ரமணியம் சுட்டிக்காட்டுகிறார்.

 

சீவகசிந்தாமணியில் முத்துமாலை முப்புரி மூரி கதவொத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்றொளிவன’ என்னும் வரி வருகிறது.

 

அதற்கு கிட்டத்தட்ட ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே சம்ஸ்கிருத, பிராகிருத, பைசாசிக மொழியிலமைந்த நூல்களில் கோபுரம் என்னும் சொல் வருகிறது.

 

சப்தகல்பத்ருமம் என்னும் அகராதி கோ+பிபர்த்தி என்று கொண்டு பசுக்களைக் காக்கும் இடம் என்னும் பொருளிலும் கோப்ய , காப்பது என்று கொண்டு காவல் மாடம்,வாயிலில் அமைந்த காவல்மாடம், அல்லது அலங்கார மாடம் என்றபொருளிலும் இச்சொல்லுக்கு விளக்கம் அளிக்கிறது.

 

ராஜநிகண்டுவில் இச்சொல்லுக்கு பூமியைக் காப்பாற்றும் இடம் என்று பொருள் அளிக்கிறது. கோயில்களுக்கு கோக்ரகம் என்று ஒரு பெயர் இருப்பதனால் பசுக்களைக் காக்குமிடம் என்ற பொருளில் இருந்தே இச்சொல் எழுந்திருக்கலாம் என்று குடவாயில் பாலசுப்ரமணியம் கருதுகிறார்.

 

ஊர்கள் மற்றும் ஆலயங்களின் நுழைவுவாயிலுக்கு மேல் அமைந்திருந்தது. கால்நடைகளைக் கட்டும் இடத்தின் நுழைவாயிலுக்குமேல் அமைந்திருந்த மாடத்திலிருந்து அச்சொல் வந்திருக்கலாம்.

 

சாதவாகனர் காலகட்டத்தில் தென்னாடு தமிழகம் உட்பட ஒற்றை அரசியல் – பண்பாட்டுவெளியாக இருந்தது. சாதவாகனர் காசுகளில் தமிழ் இடம்பெற்றுள்ளது. ஆகவே அப்போது தோரணவாயில் என்னும் கலைவடிவம் தமிழகம் வந்திருக்கலாம் என குடவாயில் பாலசுப்ரமணியம் கருதுகிறார்.

 

சாதவாகனர் காலகட்டத்தை , அதாவது சங்ககாலத்தின் இறுதியைச் சேர்ந்த நாணயங்களில் தோரணவாயிலின் சித்திரம் உள்ளது.கொல் இரும்புறையன் காசு எனப்படும் நாணயத்தில் ஒருபக்கம் தோரணவாயிலுக்குக் கீழே வாளுடன் நின்றிருக்கும் அரசனின் வடிவம் அமைந்துள்ளது.

 

இவ்வாறு கோபுரம் என்னும் சொல், அந்தக் கருத்துருவம், அந்த வடிவம் உருவாகி வந்த வரலாற்றை விரிவான தரவுகளின் அடிப்படையில் விவரித்துச்செல்கிறது இந்நூல். தமிழகத்தின் கோபுரங்களின் முதல்கட்ட வடிவங்களில் இருந்து உச்சகட்ட சாதனைகள் வரை ஒரு நீண்ட வரலாற்றை படங்களுடன் காட்டுகிறது.

ஒருவகையில் தமிழகத்தின் பண்பாட்டுவரலாறாகவே அந்தப் பகுதி அமைந்திருக்கிறது என்று தோன்றுகிறது.

 

மிகப்பழைமையான கோபுரமாகக் கருதப்படும் காஞ்சி கைலாசநாதர் கோபுரத்திலிருந்து தமிழகக் கலைக்கோபுரமாகக் கருதப்படும் திருவில்லிப்புத்தூர் வடபத்ரசாயி ஆலய கோபுரம் வரையிலான வளர்ச்சி பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியும்கூட.

 

கோபுரம் என்பதன் தத்துவத்தை குடவாயில் பாலசுப்ரமணியம் விளக்குகிறார். அதற்கு வெவ்வேறு உருவக அர்த்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

 

ஒரு வேதிகையிலிருந்து எழும் தீத்தழலின் வடிவம் கொண்டது அது என்றும் மேருவின் வடிவில் அமைந்தது என்றும் ஆலயம் என்னும் நிகர்மானுடனின் மகுடம் அது என்றும் உருவகிக்கப்படுகிறது.

 

பிரபஞ்சத்தோற்றமாக கீழே பாதாளதெய்வங்கள் முதல் மேலே தேவர்கள் தெய்வங்கள் வரை கோபுரம் உருவகிக்கப்பட்டுள்ளது.

 

கோபுரங்கள் தமிழகத்தில் காலந்தோறும் கொண்ட மாற்றங்களை விவரிக்கிறது இந்நூல்.கோபுரத்திலுள்ள சிற்பங்கள், தெய்வ உருவங்கள், அணித்தூண்கள் போன்ற பல்வேறு கலைக்கூறுகள் விளக்கப்படுகின்றன.

 

கோபுர ஓவியங்கள் செங்கற்சிற்பங்கள் மரச்சிற்பங்கள் சுதைச்சிற்பங்கள் அரச இலச்சினைகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. கோபுரப்பதிவுகளிலுள்ள வெவ்வேறு வரலாற்றுச்செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

 

மதுரை சம்பந்தமான தகவல்கள் , செய்திகள் , நிகழ்ச்சிகள் , நிறுவனத்தின் வெற்றி கதைகள் , புகைப்படங்கள் இலவசமாக பதிவிட Click : http://in4madurai.com/quickpost/

Facebook Comments

வளமான வாழ்வை உருவாக்கும் ஐந்துநிமிட யோகாசனம்

தினமும் 5 நிமிடம் யோகாசனம் செய்தால்...

Left Menu Icon