Menu

மதுரை என்ற பெயர் எதனால் ஏற்பட்டது ?

மதுரை, கூடல், மல்லிகை மாநகர், நான்மாடக்கூடல், திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது.

மதி உறை / மதில் நிரை / மருதை / மதிரை / மதுரை

மதுரை என்பது குமரி மலைத் தொடரில் பிறந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்த
ப ஃறுளி ஆற்றங்கரையில் அமைந்த பாண்டியனின் முதல் தலைநகராகும். “மதுரை” இந்தப் பெயர் தமிழர் என்ற இனம் தோன்றியதிலிருந்து அறியப்படும் தொன்மை வாய்ந்தப் பெயர். இந்தப் பெயருக்குப் பலரும் பல பெயர்க் காரணம் கூறுகின்றனர். அவற்றைப் பற்றிய சில …

குமரிக் கண்டம் அழிந்த பிறகு தமது முன்னோரின் தலைநகரமான மதுரை என்ற பெயரையே, தற்காலத் தமிழகத்தின் பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வைத்தனர். குமரிக் கண்டத்தின் தலைநகர் மதுரை என்பதை இலக்கியத்தின் வாயிலாக அறியலாம். பாண்டியர்கள் மதியையும்(சந்திரனையும்), சோழர்கள் கதிரவனையும் (சூரியனையும்), சேரர்கள் நெருப்பையும் தன குல தெய்வமாக வணங்கி வந்தனர். பாண்டியர்கள் தங்களது தலைநகரத்திற்கு மதிறை அதாவது மதி உறையும் நகர் எனப் பெயரிட்டனர். பிந்நாளில் மதிறை -> மதிரை எனவாகி மதுரை எனத் திரிந்தது . இந்தப் பெயர்க் காரணமே சரியானதக் இருக்க கூடும். ஏனெனில் இன்றும் கிராமப் புறங்களில்குல தெய்வத்தின் பெயரை தன் குழந்தைகளுக்கு சூட்டுவதைக் காணலாம். பாண்டியர்கள் தன் குலதெய்வத்தின் பெயரை தம் நகருக்கு வைத்தனர் எனக் கருதுவது பொருத்தமாகும். குமரிக் கண்டத்தில் சோழர்களும், சேரர்களும் இல்லையா?? எனக் கேள்வி எழக் கூடும். ஆம் பாண்டிய குடிகளே தமிழரின் பழங்குடிகள். சோழர்களும், சேரர்களும் பாண்டிய குடிகளில் இருந்து வந்தவர்களே. பழையோன் – பண்டையோன் என்ற வார்த்தைகளில் இருந்து வந்ததே பாண்டியன் எனவும் கொள்ளலாம்.

மற்றொரு காரணமும் பின்வருமாறு கூறுவர்.

குமரிக் கண்டத்தில் இருந்த மதுரை நகரை கடல் கொந்தளிப்பிலிருந்து காக்க யானைகளால் நகர்த்தி கொணரப் பட்ட பெரும் பாறைகளை அடுக்கி மதில்கள் எழுப்பப் பட்டன. பெருமதில்களுக்குள் சிறுமதிலும் அதற்குள் குறு மதிலும் என மூன்று அரண்களுக்குள் இருந்த நகரம் “மதில்நிரை” என அழைக்கப் பட்டது. பிந்நாளில் அது மதுரை என்றாகியது.

மருத நிலமாதலால் மருதை என அழைக்கப் பட்டதாக சிலரும் கூறுவர்.

நகரின் அமைப்பு:

நகரின் வாழ்க்கை 2500 வருட சரித்திரச்சின்னங்களோடு உரசிக் கொண்டு இயங்கி வருகிறது. நகரின் நடு நாயகமாக மீனாட்சி அம்மன் கோவில். பாண்டிய மன்னர்களும், தொடர்ந்து நாயக்க மன்னர்களும் கோவில் திருப்பணிகளை தாராளமாக செய்து வந்ததால் கோவில் பல மடங்கு விரிவடைந்து நான்கு புறமும் ஆடி வீதிகளை உள்ளடக்கி நிற்கிறது. மன்னர் திருமலை நாயக்கர் கட்டத்துவங்கிய ராஜகோபுரம் கோவிலைச் சுற்றி உள்ள சித்திரை வீதிகளையும், அதையடுத்த ஆவணி மூல வீதிகளையும் தாண்டி நிற்கிறது. இந்த வேலை நிறைவு பெற்றிருந்தால் இந்த வீதிகளும் கோவிலுக்குள் அடங்கி நின்றிருக்கும்.கோவிலைச் சுற்றி சதுரம் சதுரமாக விரிவடைந்து கொண்டே வரும் வீதிகளுக்கு தமிழ் மாதங்களின் பெயர்கள் தான். கோவிலுக்குள் ஆடி, கோவிலுக்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என மூன்று சதுர வீதிகளுக்குப் பின் ‘வெளி வீதி’கள். இவையனைத்தும் நகரின் மையப்பகுதியான பின்கோட் எண் 625001ல் அடங்கிய பகுதிகள் மட்டுமே. ஆனால் சரித்திரச் சின்னங்கள் நகரின் தற்போதைய எல்லையைத் தாண்டியும் பரவலாக உள்ளன.

நகர வழக்கங்கள் :

மதுரை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் மிகப் பெரியது (ஜனத்தொகையில் மட்டும்). தூங்கா நகரம், கூடல் நகரம் என்று பெயர் பெற்றது. நகரின் தூங்கா இயக்கத்திற்கு சீதோஷ்ணமும், நடைபாதைக் கடைகளும் முக்கிய காரணங்கள். குளிர்காலம் என்பது டிசம்பர் 25 முதல் ஜனவரி 15 வரை மட்டுமே. அதுவும் கம்பளி தேவைப்படாத அளவிற்கு தான். இங்குள்ள பெரும்பாலான மக்கள் கம்பளி, ஸ்வெட்டர் போன்றவைகளை உபயோகிப்பதே இல்லை.அதே போல் குடைகளையும் பொதுவாக வயதானோர் மட்டுமே வெயிலுக்கு பயன்படுத்துகிறார்கள். மழை சாதாரணமாக 1/2 மணி நேரம் முதல் 1 1/2 மணி நேரத்திற்கு மேல் பெய்வதில்லை, அதுவும் சில நாட்கள் மட்டும். மதுரை மக்களுக்கு மழை என்பது ஒதுங்கி நிற்கும் தருணம். ரெயின் கோட், ரப்பர் சூ, குடைகள் போன்றவை பள்ளிச் சிறார்களே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

Facebook Comments

சாதனைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் “அஸ்வினி ஆனந்த்”

அஸ்வினி ஆனந்த்: மதுரையை பூர்வீகமாகக்...

Left Menu Icon