Menu

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 9-ந்தேதி முதல் வைகாசி உற்சவ விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் 9-ந்தேதி தொடங்கி, 18-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி 9-ந் தேதி முதல் 17-ந் தேதிவரை சுவாமி, அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் தினமும் மாலை 6 மணிக்கு கோவிலில் இருந்து எழுந்தருளி புதுமண்டபம் சென்று அங்கு பக்தி உலாத்துதல், தீபாராதனை முடிவடைந்தவுடன் 4 சித்திரை வீதிகள்சுற்றிவந்து கோவிலை வந்தடைவர்.

18-ந்தேதி காலை புது மண்டபத்தில் எழுந்தருளி, பகலில் தங்கி வழக்கம் போல் மாலையில் அபிசேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதிகளை சுற்றி வந்து கோவிலை வந்தடைவர்.

இதைத்தொடர்ந்து 19-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை அருளாளர் திருஞான சம்பந்தர் திருவிழா நடைபெறுகிறது.

இதையொட்டி மே 21-ந் தேதி காலை திருஞான சம்பந்தர் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி, 63 நாயன்மார்களுடன் 4 ஆவணிமூல வீதிகளில் புறப்பாடு நடக்கிறது.

மேலும் அன்று இரவு 8 மணியளவில் திருஞான சம்பந்தர் சுவாமிகள் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளிலும் வீதி உலா புறப்பாடு நடைபெறுகிறது.

வசந்த உற்சவ விழாவையொட்டி வருகிற 9-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை கோவில் சார்பில் உபய தங்க ரதம், உபய திருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படமாட்டாது என்று மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் உபகோவிலான திருவாதவூர் திருமறை நாதசுவாமி கோவில், அருளாளர் மாணிக்கவாசகர் அவதார திருத்தலமாகும். இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா வருகிற 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

முக்கிய திருநாட்களான 13-ந்தேதி காலை சுவாமி, பஞ்சமூர்த்திகளுடன் மேலூருக்கு எழுந்தருளுதலும், 16-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருக்கல்யாணமும், 17-ந் தேதி காலை 5 மணி முதல் 6 மணிக்குள் திருத்தேர் உற்சவமும் நடைபெற உள்ளன.

Facebook Comments

சாதனைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் “அஸ்வினி ஆனந்த்”

அஸ்வினி ஆனந்த்: மதுரையை பூர்வீகமாகக்...

Left Menu Icon