மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலே தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது. இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.
சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில் முக்கியமான 4வது தலமாக திருவாலவாய் உள்ளது.இந்த நகரம் புராண காலத்தில் திருவாலவாய் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த தலத்தின் பெயரைக் கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும்.அதனால் சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இத்தலத்தினை சிவன் முக்திபுரம் என்றும் அழைக்கின்றனர். இத்தலம் முக்கியமான சிவதலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றாகும். இதனை ராஜமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனர். இத்தலம் 18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடமாகவும் உள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274 வது சிவாலயமாகவும், 192வது தேவாரத்தலமாகவும் உள்ளது.
தேவலோகத்தின் அரசனான இந்திரனால் இக்கோயில் கட்டப்பட்டது என்பது நம்பிக்கை. ராமர் , லட்சுமணர் , வருணன் , இந்திரன் , தேவர்கள் மற்றும் முனிவர்கள் போன்றவர்களால் இச்சிவாலயம் வழிபடப்பட்டுள்ளது. இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம் பிரசிபெற்றதாகும்.
தலவரலாறு