Menu

சடையாண்டி சாமி – மதுரை எழுகடல் வீதி

ஆண்டி – சமண துறவிகளை குறிக்கும். மலையாண்டி என்பது மலைமேல் ஆண்டிகளாக இருக்கும் சமணர்களை குறிக்கும் பெயர். சமணர்கள் தங்கள் தலை மயிரை ஒவ்வொன்றாக பிய்த்து மழிக்க வேண்டும்.

 

அதனால் சமண துறவிகளின் சிலை மொட்டை தலையுடன் இருக்கும். ஆனால் நாட்டார் தெய்வங்கள் கெடா மீசையும், ஜடா முடியும் கொண்டிருப்பதை நாம் காண முடிகிறது.

 

மதுரை பாண்டி கோவில் தெய்வத்தை ஜடாமுனி என்றுதான் அழைப்பார்கள். (பாண்டிகோவில் முனி சிலை பௌத்த துறவி என்றொரு கருத்தும் உண்டு). இப்படி இருவேராக இருக்கும் பண்பாட்டு வெளிப்பாடுகளின் ஒன்றிணைவுதான் சடையாண்டி சாமி.

 

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு கிழக்கே எழுகடல் வீதியில் எஞ்சியுள்ள கோட்டை சுவரின் வாயிலில் உள்ளது சடையாண்டி சாமி. இந்த பக்கமாக செல்லும் அனைவரும் சடையாண்டியை வழிபாட்டு செல்லுகின்றனர்.

 

கூடையில் பழம் சுமந்து செல்லும் பாட்டியோ, பூக்கார பெண்மணியோ சடையாண்டியை கும்பிட்டுவிட்டதுதான் செல்லுகின்றனர். தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது என்ற தீண்டாமை நிலவிய காலகட்டத்தில் எளிய மக்களின் வழிபாட்டுக்குரிய தெய்வம் சடையாண்டி உள்ளிட்ட காவல் தெய்வங்கள்தான்.

 

இன்றும் பல்வேறு சமண, பௌத்த தொல்லியல் இடங்களில் உள்ள சிலைகளை மக்கள் முனி, கருப்பணன் என அழைப்பதை காண முடியும். ஜடா முடியுடைய இச்சிலை சமணரா? அல்லது நாட்டார் தெய்வமா? என்பதை ஆய்வு நோக்கில் ஊகித்தால் நாட்டார் தெய்வமாகதான் இருக்க வேண்டுமென்று நமக்கு தோன்றும்.

 

 

பெறுவணிகர்கள் மூலமாக பௌத்தமும் சிறுவணிகர்கள் மூலமாக சமணமும் பரவியது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள வடநாட்டு மற்றும் உள்நாட்டு சிறுவணிகர்கள் இந்த சடையனை ஆண்டி என்று அழைத்து வணங்கியிருப்பார்களோ என்று யோசிக்க தோன்றுகிறது.

 

குளிர்ந்த கருவறைக்குள் புகழ் பெற்று இருக்கும் மீனாட்சி, சொக்கநாதர், கள்ளழகர் பற்றி நிறைய பதிவு செய்துவிட்டோம். தெருமுனையில் வெட்டவெளி கொளுத்தும் வெயிலில் காவல் நிற்கும் எளிய மக்களின் தெய்வங்களை பற்றி பதிவு செய்யும் ஒரு எளிய முயற்சிதான் என் படமும் எழுத்தும்.

 

எளிய மக்களின் வாழ்வியல் சூழலில் நின்று வரலாற்றை எழுதுவோம்.

 

மதுரையில் விடிய விடிய கள்ளழகர் தசாவதாரம்!

தேனூர் மண்டபத்திலிருந்து மாலை 3.45 மணிக்கு...

Left Menu Icon