Menu

மதுரை அழகர்கோவிலின் சிறப்பு!!

இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில், அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர் கோவில், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. கோவிலைச் சுற்றி உள்ள மலைகளும், இயற்கை காட்சிகளும், நிலவும் அமைதியான சூழ்நிலையும், பெருமாளைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திவ்யமான நிம்மதியைத் தரக் கூடியதாக உள்ளது.

பாண்டியர்களின் சிற்ப கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் இந்த கோவிலை குலசேகர பாண்டியனின் மைந்தனான மலையத்துவஜா பாண்டியன் புதுப்பித்தான்.

கிபி 1251 முதல் 1270 வரை ஆண்ட ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், கோவிலுக்கு பொன்னாலான விமானத்தை அமைத்தான். அதன் பின்னர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் மதுரை வீழ்ந்தபோது, கிருஷ்ணதேவராயன் இந்த கோவில் புணரமைப்பு பணிகள் செய்து ஆண்டு தோறும் திருவிழாக்கள் நடத்த ஏற்பாடு செய்தான்.

நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் மதுரை வந்தபோது, அழகர் கோவிலுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. பாண்டிய, விஜயநகர மன்னர்களைப் போல நாயக்க மன்னர்களும் அழகர் கோவிலைப் போற்றி பராமரித்தனர்.

கிபி 1558 முதல் 1563 வரை ஆண்ட விஷ்வநாத நாயக்க மன்னன் இந்த கோவிலில் பல திருப்பணிகளை செய்தார்.

இந்த கோவிலின் முக்கிய தெய்வமாக கருதப்படும் பரமஸ்வாமி சிலையும், சுந்தரராஜ பெருமாளான கள்ளழகர் சிலையும் தங்கத்தினால் செய்யப்பட்டதாகும். இது பழங்கால கைவேலைப்பாடுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

பெருமாளுக்கு வலப்புறமாக கல்யாண சுந்தரவல்லியும், இடப்புறமாக ஆண்டாளும் காட்சி தருகிறார்கள். ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து தன் தந்தை பெரியாழ்வாருடன் இத்தலத்திற்கு வந்து பெருமானை தரிசித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

கோவிலில், சுதர்சனனார், யோக நரசிம்மர், கருப்பசாமி ஆகியோருக்கு தனித்தனி கருவறைகள் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். கடைசியாக பெருமான் சந்நதி உள்ளது. இங்கே வரும் பக்தர்களுக்கு சந்நதியில் பொய் பேச தைரியம் வராது.

இதன் அருகில் 300 மீ உயரமுள்ள மலையில் சிலம்புரு, நுபுரு கங்கை எனப்படும் அருவிகள் உள்ளன. மகாவிஷ்ணு மனித உருவமாக திரிவிக்ரமர் அவதாரம் எடுத்தபோது அவருடைய பாதங்களிலிருந்து இந்த அருவிகள் உருவானதாக கூறப்படுகிறது.

கோவிலில் உள்ள திருமண மண்டபதிலுள்ள தூண்களில் நாயக்கர்களின் சிற்பக்கலை மிளிர்வதைக் காணலாம். மதுரை மீனாட்சி கோவில் தூண்களில் உள்ளது போன்ற சிற்பங்களுடன் இங்குள்ள தூண்களும் எழிலுற காணப்படுகிறது.

நரசிம்மர், கிருஷ்ணர், ரதி ஆகியோர் கிளி வாகனத்தில் அமர்ந்திருப்பது போன்றும், கருடவாகனத்தில் விஷ்ணு அமர்ந்திருப்பது போன்றும் இங்கு சிற்பங்கள் காணப்படுகின்றன. இது மட்டுமில்லாமல், திருமலை நாயக்க மன்னர் சிலைகளும் தூண் சிற்பங்களில் காணப்படுகிறது. அசோகர் காலத்திற்கு பின்னுள்ள சிற்பங்களும் இங்கு காணப்படுகிறது.

இங்குள்ள மலைக் குகைகளில் ஜைன மத குரு அஜ்ஜைனந்தி மற்றும் அவரது சீடர்கள் இங்கு தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது.

அழகர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதில் முக்கியமானது சித்திரைப் பெருவிழாதான்.

சித்திரை திருவிழாவின் போது சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் திருக்கோலம் பூண்டு மதுரைக்கு எழுந்தருளுவார். இந்த சித்திரைத் திருவிழாவுக்கு ஒரு புராணக் கதையும் உண்டு.

தங்கை மீனாட்சிக்கு மதுரையில் திருமணம். ஊரே விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது. தங்கையின் கல்யாணத்தைக் காண கிளம்புகிறார் அழகர் பெருமான். அவர் மதுரை எல்லையை அடைகிறார். இடையில் வைகை ஆறு. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆற்றைக் கடந்து மதுரைக்குள் செல்வதற்குள், தங்கையின் கல்யாணம் முடிந்து விடுகிறது. இதனால் கோபமடையும் அழகர், மதுரைக்குள் வராமல் வைகை ஆற்றோடு திரும்பி ஊருக்குச் செல்கிறார். இதை அடிப்படையாக வைத்துத்தான் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது.

Facebook Comments

சாதனைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் “அஸ்வினி ஆனந்த்”

அஸ்வினி ஆனந்த்: மதுரையை பூர்வீகமாகக்...

Left Menu Icon