Menu

நாடாளுமன்ற தேர்தலினால் மதுரை சித்திரை திருவிழாவில் சிக்கல் !


தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


காரணம், மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்குவதுதான். இதனால், மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளுமே கலெக்டரிடம் முறையிட்டுள்ளன.


மதுரையில் சாதி, மதபேதமில்லாமல் சித்திரை திருவிழாவை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். வரும் ஏப்ரல் 15-ம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்குகிறது.


16-ம் தேதி அம்மன் திக் விஜயம், 17-ம் தேதி திருக்கல்யாணம், 18-ம் தேதி தேரோட்டம் மற்றும் கள்ளழகருக்கு எதிர் சேவை, 19-ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. லட்சக்கணக்கான மக்கள் கூடும் இத்திருவிழா நாளில், மக்களால் எப்படி வாக்களிக்க முடியும் என்கிற கேள்விப் பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது.


இதுபற்றிப் பேசிய ஆன்மிகச் சொற்பொழிவாளர் சண்முகத் திருக்குமரன், “திருவிழாவில் அன்னதானம், நீர்மோர் உள்ளிட்ட சேவைகளைப் பக்தர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்படும். இதை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம்.


தேர்தல் கெடுபிடிகளால் சிரமம் ஏற்படும். எனவே மதுரை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தேர்தல் தேதி அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.


இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன், ‘‘சித்திரை திருவிழா தேரோட்டத்திலும், வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் முன் எதிர்சேவையிலும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள். எனவே மக்களின் நலன் கருதி, தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும். இதை மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்த வேண்டும்’’ என்றார்.


அ.தி.மு.க-வின் மதுரை மாநகரச் செயலாளரான அமைச்சர் செல்லூர் ராஜு, “சித்திரைத் திருவிழாவின்போது வாக்குப்பதிவு நடைபெற்றால், பாதுகாப்பு வழங்குவதில் காவல்துறைக்கு குழப்பங்கள் ஏற்படும். அதனால், மக்களின் கோரிக்கையைத் தேர்தல் கமிஷன் பரிசீலிக்க வேண்டும்” என்றார்.


தி.மு.க மதுரை மாநகரச் செயலாளர் கோ.தளபதி, “சித்திரைத் திருவிழாவுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாகவோ அல்லது இரண்டு நாள்களுக்குப் பிறகோ வாக்குப்பதிவை நடத்த வேண்டும். இல்லையென்றால் மதுரை மட்டுமல்லாமல், தென் மாவட்டங்களில் ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மக்கள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்படும். தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியைப் பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.


இதுகுறித்து மீனாட்சியம்மன் திருக்கோயில் இணை இயக்குநர் நடராஜன் அவர்கள் கூறியதாவது . ‘‘சித்திரைத் திருவிழாவுக்கான தேதிகள் குறித்து எப்போதோ முடிவு செய்யப்பட்டுவிட்டன. இந்த நிலையில், திருவிழா நாளில் தேர்தல் நடத்துவது பற்றி நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது’’ என்றார்.


இதற்கிடையே மதுரையில் வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பார்த்தசாரதி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக அறிக்கைத் தாக்கல் செய்யும்படி, மதுரை கலெக்டருக்கு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.


மதுரை மாவட்ட கலெக்டர் இதுபற்றி கூறும்போது , “சித்திரை திருவிழா நடந்தாலும், வாக்குப்பதிவு நடத்துவதில் எந்தச் சிரமமும் இருக்காது. மக்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிப்பது பற்றிப் பரிசீலிக்கப்படும். உள்ளூர் விடுமுறை ஏப்ரல் 19 என்றுதான் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம்.


அதனால், ஏப்ரல் 18 அன்று தேர்தல் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் கொடுத்துள்ள கோரிக்கை மனுவைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்” என்றார்.

இணைய உலகில் இ-வாலட் புரட்சி

பணமில்லாமல் பரிவர்த்தனைகளை எளிதாக...

Leave a Reply

Left Menu Icon